Saturday, July 24, 2010

1. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை - ஜூலை 2010

ஓம். நமசிவாய.

அம்மையப்பனின் அருளால் எனக்கு கிடைத்த வைஷ்ணோதேவி-அமர்நாத யாத்திரை மற்றும் இறை தரிசன அனுபவங்களை பெரியோர்களின் திருவடி பணிந்து வழங்குகின்றேன். சிவார்ப்பணம்.. அம்மையப்பனின் அருளாலே அவர்களிருவரின் தாள் பணிந்து துவங்குகிறேன். 


அமர்நாத், வைஷ்ணோதேவி யாத்திரை (2010) பயண அனுபவங்கள்...

பகுதி ஒன்று: -

மலரும் நினைவுகள்... 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் அலுவலக நண்பர்கள் கோவிந்த மனோஹரும், பன்னீர்செல்வமும் அமர்நாத், வைஷ்ணோதேவி புனித யாத்திரை செல்லப் போவதாக என்னிடம் தெரிவிக்கும் வரை அந்த இரு புனித ஸ்தலங்களையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாமலேயே இருந்தது. என்னையும்  கலந்து கொள்ள அவர்கள் அழைத்த போது, அப்போதிருந்த எனது குடும்ப சூழ்நிலையில் என்னால் அந்த புனித யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. திரும்பி வந்ததும் அவர்கள் இருவரும் தமது யாத்திரை அனுபவங்களை என்னிடம் விவரித்த போது தான் நான் செய்த தவறு எனக்கு புரிந்தது.

மேலும் நண்பர் பன்னீர்செல்வம் எனக்கு தந்த அமர்நாத் பனிலிங்கத்தின் புகைப்படத்தினை கண்ட போதே மனசுக்குள் ஒரு விதை விழுந்தது. என் சிவம் அப்போதே என்னை அழைத்து விட்டார் என்று புரிந்தது. வாழ்நாளின் எப்படியும் நிறைவேற்ற வேண்டிய ஒரு லட்சியமாக அது உள்ளுக்குள்ளேயே நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டு இருந்தது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வகையில் அமர்நாத்/வைஷ்ணோதேவி புனித யாத்திரைகளை பற்றிய செய்திகளை மீடியாக்களின் உதவியுடன் அறிந்து கொண்டு வந்தேன். அந்த செய்திகள் என ஆவலை அதிகப் படுத்தக் கூடியதாகவே அமைந்தன. இதற்கிடையே எனது நண்பர் பன்னீர்செல்வம் நான்கைந்து முறை அமர்நாத் யாத்திரை சென்று வந்து விட்டார். ஒவ்வொரு முறையும் அமர்நாத்/வைஷ்ணோதேவி பயணத்துக்கான அழைப்பு வரும் போதெல்லாம் சொல்லி வைத்தது போல சோதனையாக ஏதாவது ஒரு குடும்ப நிகழ்வு அல்லது பணிச் சூழல் என் பயணத்துக்கு தடையாக அமைந்தது. அதன் பிறகு என் நண்பர்கள் ஒரு கால கட்டத்தில் அவர்களது பயணத் திட்டங்களை என்னிடம் முன்கூட்டியே சொல்லுவதை கூட விட்டு விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்கு காரணம் என் மேல் ஏற்பட்ட சலிப்பு அல்ல. என்னைப் பற்றிய ஒரு பரிதாப உணர்வு தான் காரணம். 

அது போலவே இந்த ஆண்டின் துவக்கத்திலும் நிகழ்ந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் ஹரித்வார், ரிஷிகேஷ் செல்லலாம் என்று என்னுடன் யோகா பயிலும் நண்பர்களான  ப்ரேம் மற்றும் மணா இருவரும் என்னிடம் கூறினார்கள். எனது யோகா ஆசிரியர் திரு. தி.ஆ.கிருஷ்ணன் அவர்களும், இயற்கை நல வாழ்வியல் வல்லுநர் மூ.ஆ. அப்பன் அவர்களும் உடன் வர இசைந்தார்கள். இந்த பயணத்திலாவது கலந்து கொள்ளலாம் என்று நான் மகிழ்ச்சியுடன் பயண ஏற்பாடுகளை கவனித்தேன். இணையத்தில் சென்று பயண திட்டங்களை வகுத்து எனக்கும் சேர்த்து டிக்கட் முன் பதிவுகளை செய்தேன். எனது உள்ளுணர்வு கூறியதின் காரணமாக குழுவாக முன்பதிவு செய்வதற்கு  பதிலாக அவர்கள் நான்கு பேருக்கு ஒரு டிக்கட்டும், எனக்கு தனியாக ஒரு டிக்கட்டும் போக வர முன்பதிவு செய்து கொண்டேன். எதி பார்த்தபடியே அலவலகத்தில் ஒரு முக்கியமான ப்ரொஜெக்டை நான் எடுத்து செய்ய வேண்டி வந்ததின் காரணம்மாக எனது லீவு மறுக்கப்பட்டது. கனத்த இதயத்துடன் சென்ட்ரல் ஸ்டேஷன் சென்று அவர்களை வழியனுப்பி விட்டு எனது டிக்கட்டுகளை கேன்சல் செய்தேன். 

பின்னர் அலுவலக நண்பர் கோவிந்த் மனோகர் கடந்த மே மாதம் மற்ற நண்பர்களுடன் டார்ஜீலிங் உல்லாசப் பயணம் போக ஏற்பாடுகள் செய்யும் முன்னர் என்னிடம் வழக்கப்படி தெரிவிக்க நானும் வழக்கப்படிஅவரிடம் எனது வர இயலாமையை தெரிவித்தேன். 

பின்னர் ஒரு நாள் அவரிடம் பேசும் போது ஏதாவது ஒரு காரணமாக என்னால் பயணத் திட்டங்கள் செயல்படுத்த இயலாமல் போவது குறித்து வருந்திய போது அவர் என்னிடம் ஒரு குண்டை தூக்கி போட்டார். அதைக் கேட்ட நான் அதிர்ந்து போனேன். 

Thursday, July 22, 2010

Living with the Himalyan Masters - Swami Rama

Living with the Himalayan Masters