Monday, December 2, 2013

7. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012


திருச்சிற்றம்பலம்.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 
(பாடல் எண் 11-முதல் தந்திரம்-சிவபரத்துவம்-திருமந்திரம்)


7. தேவபூமியில் சில நாட்கள். 

குமாவுன் பிரதேசத்தின் நீதித் தெய்வம் கோலு தேவதாவின் கதை.

நீதிவழுவாது ஆட்சி புரிந்த கோலு தேவதைக்கு பற்பல திருநாமங்கள் உண்டு. கோல்ஜியூ, கோலு தேவ்தா, ராத்காட் கோலு, கோரியா, க்வால் தேவதா, க்ரிஷன்-அவதாரி, பலதாரி, பாலகோரியா, தூடாதாரி, நிரங்காரி, கொல்லு, கொல்லா, ஹரியா கோலு, சமந்தாரி கோலு, த்வா கோலு, கொரைல், மற்றும் குகுத்தியா கோலு எனப் பற்பல திருநாமங்கள் கொண்டவர் இந்த கோலு தேவதா. 

Inline images 5
கோலு தேவதா திருக்கோவில், சித்தாய் 
(அல்மோரா-உத்தரகண்ட்)
கோலு தேவதாவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சமாகவும், பைரவரின் அம்சமாகவும் வழிபடுகிறார்கள். கவுர் பைரவர் என்றழைக்கப்படும் ஸ்ரீபைரவர், ஸ்ரீகிருஷ்ணரின் அம்சம் என்றும் கூறுகிறார்கள். 
Inline images 6
நீதி தேவன் கோலு தேவதா.

சிவனின் அம்சமான காலபைரவரும் இந்த கவுர்பைரவரும் ஒன்றேதானா அல்லது வேறு வேறா என்று தெரியவில்லை! குமாவுன் பிரதேசத்தில் உள்ள கரிசம்பாவத் (Gari Champavat) என்ற பகுதியை ஆண்ட சாந்த் வமிசத்தின் புகழ் வாய்ந்த மன்னரான ஜால்ராய் என்பவரது மகனான அரசர் ஹால்ராயின் புத்திரர் தான் இந்த கோலு தேவதா. இந்த சாந்த் வமிசத்தில் தான் ராஜா ஹரிச்சந்திரனும் உதித்தவர் என்று இப்பகுதியில் நம்புகிறார்கள்.

கோலுவின் கதை:
மன்னர் ஹால்ராய் ஒரு முறை தனது படையினருடன் பக்கத்தில் உள்ள ஒரு வனத்துக்கு வேட்டையாடச் செல்கிறார். 

அந்த நேரத்தில் இரு காளைகள் கடுமையாக ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு போரிடுவதைப் பார்க்கிறார் மன்னர். அவற்றை சமரிடுவதிலிருந்து பிரிக்க அவர் செய்யும் முயற்சிகள் பலிக்காமல் போகின்றன.

களைப்படைந்த மன்னருக்கு நீர் கொண்டு வருவதற்காக அவரது மெய்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் சற்று தூரத்தில் இருக்கும் இருக்கும் ஒரு நீரோடைக்கு செல்கிறார்கள். நீர் முகந்து வரும் போது அங்கே ஒரு மரத்தடியில் அழகிய இளம்பெண் (கலிங்கா) நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறார்கள். 

விளையாட்டாக அவள் முகத்தில் தண்ணீரை ஒருவன் தெளிக்கிறான். இந்தச் செய்கையால் தனது நிட்டை கலைந்து கண் விழித்த அந்தப் பெண் அவர்களைப் பார்த்து, ‘சண்டையிடும் இரண்டு மாடுகளைப் பிரிக்கத் தெரியாத கையாலாகாத அரசனின் முட்டாள் அடிமைகள் தானே நீங்கள்? என்று கேட்கிறாள். இதனைக் கேட்டு வியந்த அந்த வீரர்கள் செய்தியை மன்னனிடம் தெரிவிக்கவும்,  மன்னன் கலிங்காவைப் பார்க்க வருகிறான். 

கலிங்காவின் அறிவிலும், அழகிலும் மயங்கிய மன்னன் அவளை மணம் புரிய விரும்புகிறான். கலிங்காவோ தனது தந்தையின் அனுமதி இன்றி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்கிறாள்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மன்னன், கலிங்காவின் தந்தையைச் சந்திக்க செல்கிறான். கலிங்காவின் தந்தை ஒரு குரூபியாகவும், தொழுநோயாளியாகவும் இருப்பதைக் காண்கிறான். எனினும் கலிங்காவின் மேல் கொண்ட காதல் மாறாமல், தனது விருப்பத்தை அவளது தந்தையிடம் தெரிவித்து சம்மதம் பெறுகிறான்.

கலிங்காவை கடிமணம் புரிந்து கொண்டு தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். மன்னனுக்கு ஏற்கனவே ஏழு மனைவியர் இருந்தும் அவர்கள் மூலம் அவனுக்கு புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. கலிங்கா அரசன் மூலம் கருத்தரிக்கிறாள். அவளது மகப்பேறு காலம் நெருங்கும் சமயத்தில் மன்னன் தலைநகரத்தை விட்டு வெளியே போகவேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. 

எனவே மன்னன் அரசியரிடம், பிரசவகாலத்தின் போது கலிங்காவுக்கு உறுதுணையாக இருக்கச் சொல்லிவிட்டு வெளியூர் செல்கிறான். 

மன்னன் சென்ற பிறகு கலிங்காவுக்கு பிரசவத்தின் போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. இதனைக் கண்டு பொறாமை கொண்ட ஏழு ராணிகளும், மருத்துவச்சியை மிரட்டி கைக்குள் போட்டுக் கொண்டு கலிங்காவுக்குத் தெரியாமல் குழந்தையை அகற்றி குழந்தையின் இடத்தில் ஒரு பூசணிக்காயை வைத்து விடுகிறார்கள். மருத்துவச்சியிடம் நிறைய பொற்காசுகளைக் கையூட்டாகத் தந்து அந்தக் குழந்தையை கொன்று விடச் சொல்கிறார்கள். 

ஆனால் இரக்கமுள்ள நல்லவளான மருத்துவச்சியோ குழந்தையை ஒரு கூடையில் பொற்காசுகளுடன் வைத்து ஒரு ஆற்றில் விட்டுவிடுகிறாள். ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு செம்படவனிடம் அந்த குழந்தை கிடைக்கிறது. பிள்ளை இல்லாத அவன் அந்த அழகிய குழந்தையை கொண்டு சென்று மனைவியிடம் கொடுக்கிறான். வாராது வந்த செல்வமாக வந்த அந்தக் குழந்தையை தமது சொந்தக் குழந்தை போல சீராட்டி பாராட்டி வளர்க்கிறார்கள். 

இதற்கிடையே இந்த ஏழு ராணிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு கலிங்கா ஒரு பூசணிக்காயை பெற்றெடுத்தவள். மேலும் அவள் ஒரு சூனியக்காரி என்றும், தொடர்ந்து அரண்மனையில் இருந்தால் நாட்டுக்கும், மன்னனுக்கும் ஆபத்து என்றெல்லாம் விதவிதமான வதந்திகளைப் பரப்பி அரசன் தலைநகர் திரும்பு முன்னரே சாமர்த்தியமாக கலிங்காகாவை அரண்மனையில் இருந்து வெளியேற்றி அனுப்பிவிடுகிறார்கள். திரும்ப வந்த மன்னவன் தனது இராணிகள் சொன்ன கட்டுக்கதைகளை நம்பி வாளாவிருந்து விடுகிறான்.

ஆனால் பையனோ புத்திசாலியாக வளருகிறான். அவனது சாதுர்யமான செய்கைகள் படித்தவர்களையும் விரும்பி அவனை மதிக்கும்படியாக இருக்கின்றன. அவன் தக்க பருவத்துக்கு வரும்போது அவனது வளர்ப்புத் தந்தை பையனிடம் அவன் வந்த விதம் பற்றி கூறுகிறான். இதற்கிடையே மருத்துவச்சியும் தற்செயலாக இந்தப் பையனைச் சந்திக்க நேருகிறது. அவனது பிறப்பு பற்றி அவள் கூறிய செய்திகளைக் கேட்டு தனது தாயை சந்திக்கவேண்டும் எனவும், மன்னனுக்கு உண்மை நிலவரம் தெரிய வைக்க வேண்டும் எனவும் விரும்புகிறான். தக்க தருணத்துக்காக அந்த இளைஞன் காத்திருக்கிறான்.

அவன் காத்திருந்த அந்தத் தருணமும் வந்தது. தனது பகுதிக்கு மன்னன் தனது பட்டத்து ராணிகளுடன் விஜயம் செய்யவிருப்பதை அறிந்த இந்த இளைஞன் ஒரு மரக்குதிரையை எடுத்துக் கொண்டு மன்னன் முகாமிட்டிருந்த வனப் பகுதிக்கு செல்கிறான். மன்னன் ஒரு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த இளைஞன் தனது மரக்குதிரையை எடுத்துக் கொண்டு ஆற்றில் இறங்குகிறான். இளைஞனின் செய்கையை கண்ட மன்னன் அவனை அழைத்து, ‘மரக் குதிரையை ஆற்றில் இறக்கி என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறான். இளைஞனோ ‘மாட்சிமை பொருந்திய மன்னரே. எனது குதிரையை நீர் பருக அழைத்து வந்திருக்கிறேன் என்கிறான். இதனைக் கேட்ட மன்னன் நகைத்து, ‘அடே முட்டாள் பையா, பார்த்தால் அறிவுடையவன் மாதிரி தெரிகிறாய். ஆனால் நீ செய்வது அபத்தமாக இருக்கிறதே. மரக் குதிரை எப்போதாவது நீர் அருந்துமா? என்று பரிகாசமாக கேட்கிறான். 

தக்க சமயத்துக்காக காத்திருந்த இளைஞன் பணிவுடன், ‘அரசே, நான் முட்டாள்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம், ராணிக்கு பூசணிக்காய் குழந்தையாக பிறக்கும் என்பதை நாட்டின் மாட்சிமை பொருந்திய அரசரான தாங்கள் உட்பட இந்த நாட்டில் அனைவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல், உண்மை நிலவரத்தை ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு நம்பும் போது, எனது மரக் குதிரை நீர் அருந்துமா என்பதில் மட்டும் எப்படி தங்களுக்கு சந்தேகம் வருகிறது என்பது தான் புரியவில்லை என்றான். 

இளைஞனின் பதிலால் அதிர்ச்சி அடைந்த மன்னன் அவனை அருகில் அழைத்து அவனிடம் தனியே பேசி, நடந்த அனைத்தையும் அறிந்து கொள்கிறான். 

பொறாமையினால் தவறிழைத்ததை ஒப்புக் கொண்ட ராணிகளை தண்டித்த அரசன் தனது மனைவி கலிங்காவை கண்டுபிடித்து அவளை அரசியாக்கி, தனது மகனை தனது வாரிசாக பட்டம் சூட்டுகிறான். 

தனது தந்தையின் காலத்துக்கு பின்னர் கோலு முடி சூடிக் கொள்கிறான். ஆட்சிக்கு வந்ததும் நீதி, நேர்மை வழுவாது கோலோச்சுகிறான். சுபிட்சமாக நாட்டை வைத்திருக்கும் தமது மன்னனை நாட்டு மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள்.

கோலு மன்னனது காலத்துக்குப் பின்னரும் இன்றளவிலும் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும், கோவில்களிலும் இறைவனாகத் துதிக்கப்பட்டு வருகிறார். நீதி, நியாயத்துக்குட்பட்ட எந்த ஒரு கோரிக்கையையும் கோலு தேவதா நிறைவேற்றித் தருவார் என்று மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் என்பதற்கு கோலு தேவதாவுக்கு அமைந்திருக்கும் எண்ணற்ற கோவில்களும், அங்கே குவிக்கப்படும் கோரிக்கைக் கடிதங்களும், கோரிக்கைகள் நிறைவேறிய பின்னர் கோவில் வளாகத்தில் கட்டப்படும் மணிகளுமே என்றென்றும் சாட்சியாக விளங்குகின்றன.

Inline images 2
கோரிக்கைகளும், மணிகளும். 

Inline images 3
மணித் தோரணங்கள்.

Inline images 4
கோலு தேவதாவின் கருவறைக்குள்...

நாங்கள் தரிசித்த சித்தாய் கோவிலில் வீற்றிருக்கும் கோலுதேவதாவே உண்மையான கோலுதேவதா என்று அந்தக் கோவில் பண்டிட் கூறினார். குமாவுன் பிரதேசத்தின் எல்லா ஊரிலும் கோலுதேவதா கோவில் கொண்டிருக்கிறார். 
Inline images 1
ஜெய் கோலு தேவதா.
(குறிப்பு: கோலு தேவதாவின் கதைகள் பலவாறாகக் கூறப்படுகின்றன. எனினும் பெருவாரியான மக்கள் நம்பும் இந்தக் கதையை நாமும் நம்புவோமாக) 
(பகிர்வுகள் தொடரும்) 

6. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012

திருச்சிற்றம்பலம்.

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
(காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி)

தெளிவுரை : பொதுவாக, உயிர்க் கூட்டங்களின் வினைக்கு ஈடாக அவர்களைத் தோற்றுவிக்கும் உடம்பினின்றும் பிரித்தும் செயல் புரியும் இறைவன், சிறப்பாகத் தன்னையன்றி வேறுயாரையும் புகலாக அடையாத அன்பர்களைத் துன்பத்தினின்றும் விடுவித்து, நலம் அருளுவான்)

====
6. தேவபூமியில் சில நாட்கள்.

எங்களது உத்தர்கண்ட் பயணத்தின் முதல் தரிசனமாக கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும்  கோலு தேவதாவை தரிசித்தோம்.

அல்மோராவிலிருந்து சுமார் ஆறேழு கி.மீ. தூரத்தில் இருக்கும் சித்தாய் (Chitai) ஒரு அழகிய மலைக் கிராமம். சாலையோரத்திலேயே ஜாகேஷ்வர் செல்லும் பாதையில் வலது புறமாக கோலு தேவதாவின் திருக்கோவில் அமைந்திருக்கிறது. அல்மோரா அருகில் உள்ள சித்தாய் கிராமத்தில் உள்ள இந்த கோலு தேவதாவின் திருக்கோவில் குமாவுன் பிரதேசத்தின் மிகப் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 

நாங்கள் சித்தாய் சென்று சேர்ந்த போது நேரம் காலை பத்தேகால் ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஜாகேஷ்வர் செல்ல மேலும் நாற்பது கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். மலைப் பாதை பல இடங்களில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாகேஷ்வர் போய்ச் சேர குறைந்தது மூன்று மணிநேர பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே முதலில் கோலு தேவதா தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள்.  அதன் பிறகு நாம் சிற்றுண்டி அருந்தலாம் என்று திரு.மனோஜ் சொன்னார்.

மனோஜ் வெளியில் காரில் ஓய்வெடுப்பதாக சொல்ல நாங்கள் சுவாமி தரிசனம் செய்து வர கோவிலுக்குள் நுழைந்தோம்.

Inline images 2
கோலு தேவதா மந்திரின், பிரதான நுழைவு வாயில்.

Inline images 3
நுழையும் போதே தோரணங்களாக நம்மை வரவேற்கும் மணிகள்.

Inline images 4
எங்கிலும் மணித் தோரணங்கள்.

Inline images 5
காணக் கண்கொள்ளாக் காட்சி.

Inline images 6
பக்தர்களின் காணிக்கையாக கட்டிவிடப்பட்டிருக்கும் மணிகள்.

நம்மூரைப் போலின்றி நேரடியாக மூலவரிடம் நாம் போய் ஸ்வாமி தரிசனம் செய்யலாம். அழகான கருவறைக்குள் நாங்கள் நுழைந்தோம். பண்டிட்ஜி உள்ளே அமர்ந்து எங்களை வரவேற்றார். நெற்றியில் திலகமிட்டு எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் கோலு தேவதாவை மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு அங்கே சற்று நேரம் அமர்ந்தோம். கோலு தேவதா பற்றி பண்டிட்டிடம் கேட்டோம். திரு.நடராஜன் ஹிந்தியில் அவருடன் உரையாடினார். சென்னையில் இருந்து புறப்ப்படு முன்னரே நண்பர் திரு.மங்களீஸ்வரன் குமாவூன் பிரதேசம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தார். குமாவூன் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மிக அற்புதமாக புத்தகத்தை எழுதி இருந்தார்கள். 

ரயில் பயணத்தின் போது கிடைத்த நிறைய நேரங்களில் இந்தப் புத்தகத்தை படித்து குமாவூன் பிரதேசத்தைப் பற்றிய பல செய்திகளை மனதுக்குள் வாங்கிக் கொள்ள இயன்றது. அப்போது படித்த பல கதைகளில் என்னை கவர்ந்த கதை கோலு தேவதாவின் கதைதான். அதைப்பற்றி எனது சஹயாத்திரிகளிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் இந்த தேவதாவின் கொள்வில்லை தரிசிக்கவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் ஆன்மீகப் பயணத்தின் முதல் கோவிலாகவே கோலு மந்திர் அமைந்தது தேவபூமியின் முக்கிய கடவுளான கோலு தேவதாவிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த நல்லாசியாக கருதினோம்.

எங்கிருந்து வருகிறோம் என்று பண்டிட் எங்களிடம் கேட்டார். சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து நாங்கள் உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஆன்மீகப் பயணம் வந்திருப்பது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ந்தார். கோலு தேவதாவைப் பற்றி நாங்கள் படித்து அறிந்திருந்தது குறித்து அவரிடம் தெரிவித்தோம். அது அவரை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகியது. கோலு தேவதாவின் ஒரிஜினல் கோவில் இதுதான் என்று கூறினார். குமாவுன் பிரதேசத்தின் காவல் தெய்வமாக, நீதி அரசனாக கோலு தேவதா விளங்குவதாக கூறினார். நாங்கள் மீண்டும் கோலு தேவதாவை வணங்கி விட்டு பண்டிட்ஜிக்கு நன்றி கூறிவிட்டு கருவறையை விட்டு வெளியே வந்தோம். வெளிப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எல்லாருக்கும் கையில் கயிறு கட்டி விடுகிறார். மற்றொருவர் துனி மாதிரி அமைந்திருக்கும் யாக குண்டத்தில் இருந்து திருநீற்றை வழங்குகிறார். கருவறைக்குள்ளும், வெளிச் சுற்றிலும் கோலு தேவதாவை வேண்டி நிறைய விண்ணப்பங்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் ஹிந்தி மொழியில் கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஓரிரு ஆங்கிலக் கடிதத்தையும் பார்த்தேன். வேலை வாய்ப்பு, உத்தியோக மாற்றல், பணி இட மாற்றல் கோரிக்கைகள், நிலத் தாவாக்கள் சாதகமாக முடியவேண்டும், தாமதமாகும் திருமணங்கள் கைகூட, பிள்ளை வரம் என எண்ணிலடங்கா கோரிக்கைகள் இங்கே வைக்கப்பட்டு அவைகள் அனைத்தும் நிறைவேறுவதாகவும், நேர்த்திக் கடனாக பக்தர்கள் மணிகளைக் கட்டி விட்டு செல்வதாகவும் பண்டிட்ஜி கூறினார். கட்டித் தொங்க விடப்பட்ட மணிகளே பல சைஸ்களில் பல ஆயிரக்கணக்கில் இருந்ததைக கண்டோம். நான்கடி உயர மணி ஒன்று தரையில் வைக்கப் பட்டிருக்கிறது. அதற்காக தனியாக பில்லர் ஒன்று கட்டவிருப்பதாக சொன்னார்கள். இது மட்டுமின்றி ஒரு அறை முழுவதும் காணிக்கையாக பெறப்பட்ட மணிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக கூறினார் அங்கிருந்த கோவில் பணியாளர் ஒருவர். நெடிதுயர்ந்த தேவதாரு, மற்றும் பைன், ஃ பர் மரங்கள் கோவிலைச் சுற்றி அமைந்திருக்க, குரங்குகள் நிறைய கோவிலுக்குள் விளையாடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தன. நல்ல வேளையாக கோவிலுக்கு வரும் பக்தர்களை அவைகள் எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் இருப்பது வியப்பாக இருந்தது. 

குழந்தைகள், ஆடவர், மகளிர், பெரியவர்கள் என்று சாரி சாரியாக கோவிலுக்குள் வந்து வழிபட்டுக் விட்டு மிகவும் அமைதியாக திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். டூரிஸ்டுகளாக வந்திருந்த நாங்கள் தான் தொணதொணவென பேசிக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தோம். சுமார் அரை மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு பசி வயிற்றை கிள்ள காலைச் சிற்றுண்டி நினைவுக்கு வந்தது. கோவிலை விட்டு வெளியே வந்தோம். எங்கள் வரவுக்காக வெளியில் காரில் காத்திருந்த திரு.மனோஜ் எங்களை அருகாமையில் இருந்த சிற்றுண்டி  சாலைக்கு அழைத்துச் சென்றார். காலை பத்தரை மணி ஆகி விட்ட அந்த வேளையில் பூரி, சப்ஜி, சன்னா, ரைதா(தயிர்ப் பச்சடி) இவை மட்டுமே உண்ணக கிடைத்தன. காலையில் எண்ணைப் பலகாரமா என்று யோசித்த நான் ஜாகேஷ்வர் சென்று சேரும் வரை வேறு வழியில்லை என்று உணர்ந்து பூரி, சன்னா, ரைதா போன்றவற்றை சாப்பிட்டு விட்டு, தேநீர் அருந்தி காலை சிற்றுண்டியை ஒருவாறாக முடித்துக் கொண்டு கிளம்பினோம். 

ஆமாம். கோலு தேவ்தாவின் சுவாரஸ்யமான கதையை சொல்ல மறந்து விட்டேன். நீங்களும் என்னை நினைவு படுத்தாமல் விட்டு விட்டீர்களா? சரி. அடுத்த பகிர்வில் ஜாகேஷ்வருக்கு போகும் வரை கிடைக்கும் பயண நேரத்தில் கோலு தேவதாவின் உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான கதையை சொல்கிறேன். சரிதானே?

(பகிர்தல் தொடரும்)